தில்லைக்கூத்தனே!

தில்லைக் கூத்தபிரானே!

எல்லையில்லாப் பெருவெளியில் ஏகாந்தப்பேரறிவாய்

எண்ணவொண்ணாத் தாரகை கோளங்களாய்ப்பரவி

பின்னும் பரிபூரணனாய் ஆனந்தப் பரவசனாய்

என்றும் சுழன்று நடம்செய்தாடும் பரசிவமே!

அனாதியாய் ஆடியாடி உந்தன் பாதம் நோகாதோ?

ஆனந்த நிலைத்தவிப்போ? நிறைவு செய்ய மனமில்லையோ?

ஓர் அணுவாய்த்துகளாய் எனைப் படைத்தழகு பார்த்தாய்!

சேய் சொல் கேட்பதொன்றும் புதிதில்லை உமக்கே!

நினைத்ததும் முக்தி தரும் உம் இடதுபதம் அதையென்

முடிமேல் வைத்து நடம் நிறைவு செய்வாய்!

அனைத்துலகும் வணங்குந்தில்லை அம்பலவா, அரசே!

அடியேன் சொல்வதனைக் கேட்டருளே!

நானேன் பிறந்தேனென நாளும் வினவியும்

காணும் வகையறியாக் கபோதி என்போலுண்டோ?

மோனமொழி புரிந்த உந்தன் மாணாக்கர் அறிவின் மிக்கார்!

நானும் அவர்நிகரோ நாயேனைக் கடைத்தேற்றே!

தனையனைக் காத்திடுதல் தந்தைக்கழகன்றோ?

வினைப்பயன் என்றெனைக் கைவிடல் நன்றோ?

சிறியேன் செய்பிழை பொறுத்தல் உம் கடனெனை

அறியுமாறு அருளுவாய் அம்பலக் கூத்தனே!

பொன்னையுருக்கிப் புடம்போட்டு உலைதனிலே

கொல்லர் அழகு தர அணிசெய்வார் தாண்டவனே!

என்னையும் புடத்திலிட்டு நீர்பூணும் ஓரணியாய்ச்

செய்தணிந்தால் அம்மை சிவகாமி மகிழ்வாரே!

மனம்பிணை பெட்டியதில் எனைக் காணாது ஏக்கமுற்றேன்

வினைப்பயனோ வீணாய்க் கழித்தேனே இன்றளவும்!

உமைக்கண்டு என்றுமினிப் பிரியா மெய்க்காதலுற்றேன்

எனைக்கரம்பற்றி மீட்பாய் எம்மான் கூத்தபிரானே!