காலையில் கண்ட கனவு
ராம்கி வந்திருந்தான். எனது நண்பன். நாகர்கோவிலில் ஒரு மில்லில் கணக்கர் வேலை. மாதாமாதம் நானூறு ரூபாய் சம்பாத்தியம். கல்யாணத்திற்கு காத்திருந்தாள் தங்கை. அதைப்பற்றி சிந்திக்கவே இடம் கொடாதிருந்தது வீட்டு நிலைமை. அப்பா திடுமென இறந்து போக அவரது சம்பாத்தியம் நின்று ஏழ்மை எகத்தாளமிட்டிருந்தது அவனது வீட்டில்.
அவன் தங்கை உமா நன்றாகவே இருப்பாள். ஒரு அரசு ஊழியர் அவளைக் கல்யாணம் செய்துகொள்ள முன்வந்திருக்கிறார். நல்லவராகவும், எதிர்பார்ப்பு எதுவுமே இல்லாமல் அவள் போட்டிருந்த ஒரே தங்கச்சங்கிலியுடன் அவளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார். கல்யாணத்திற்கு வரும் அவரது விருந்தினர்களை நன்கு கவனித்துக்கொண்டால் போதும் என்று சொல்லிவிட்டார். அரிய வாய்ப்பு, விட்டுவிட்டால் மீண்டும் அமையுமா என்பது சந்தேகம் தான். ஆனால் தேவையான பணத்திற்கு என்ன செய்வது? தத்தளித்துக் கொண்டிருந்தான் ராம்கி. நான் சென்னையில் இருந்தேன். ஒரு பேங்கில் ஸ்டெனொகிராபர். அவனது சொந்தங்கள் யாரும் உதவிசெய்ய முன்வராத நிலையில், அம்மாவின் நச்சரிப்பின் பேரில் சென்னை வந்து என்னிடம் நிலைமை சொன்னான். “யோசிக்க ஒரு நாளாவது அவகாசம் கொடு” என்றேன்.
முன்னம் வேலை செய்த கம்பனியில் வைத்தி சார் என் பாஸ். ஒரு சாட்டர்டு அகௌண்டன்ட் மற்றும் நல்ல மனம் படைத்தவர், திருமணமாகாதவர். அவரிடம் சொன்னால் வழி ஏதாவது சொல்வார் என்று தோன்றியது. அவரைச் சந்தித்து நண்பனது நிலைமை சொன்னேன்.
“நல்ல காரியம். எனது சக நண்பர்களிடமும் சொல்லி நிச்சயம் ஒரு தொகை, பத்தாயிரமாவது திரட்டி உதவி செய்கிறேன். சுமாராக நடத்திவிடலாம்” என்று தைரியம் கொடுத்தார். அதன்பேரில், நண்பனுக்கும் தைரியம் சொல்லி தயாரானவுடன் பத்திரிக்கையை தபாலில் அனுப்பும்படி – நேரில் வந்தால் ரயில் செலவு ஆகுமென்று – சொன்னேன்.
மூன்று வாரத்தில், சொன்னபடி கல்யாண பத்திரிக்கை அச்சடித்து 50 பிரதிகள் அனுப்பி வைத்தான் ராம்கி. மிகுந்த நம்பிக்கையுடன் வைத்தி சாருக்கு போன் செய்தேன். ஆனால் ஏனோ அவர் குரலே மாறுபட்டிருந்தது. அவர் சொன்னார்
“வீட்ல நெலமை சரியில்ல. அம்மா கீழ விழுந்து இடுப்புல அடிபட்டு ஆஸ்பத்திரில கிடக்கிறா. ஷுகர் வேற. அதுனால ஆபரேஷனும் பண்ண முடியல. ஆபீசுக்கு லீவ் போட்டுட்டு அவகூடவே ஆஸ்பத்திரில தான் இருக்கேன். பணம் தண்ணீராச் செலவாறது. இந்த நெலமைல என்னால உனக்கு எந்த உதவியும் செய்ய முடியும்னு தோணல. மேலும் பணம் தெரட்டறதுக்கு நண்பர்கள்ட்ட நெறைய பேசி சம்மதிக்க வெக்கணும். அதுக்கெல்லாம் இப்போ எங்கிட்ட சமயம் இல்ல.” என்றார். விக்கித்துப்போன நான் “சார், நீங்க குடுத்த உறுதில தான் அவங்களுக்கு வாக்கு கொடுத்தேன். இப்போ எப்பிடி சார் கல்யாணத்த நடத்தறது?” என்று இழுத்தேன்.
” எனக்கு ஒன்னும் புரியலப்பா, கடவுள்ட்ட வேண்டிக்க. அவர் தான் இந்தக் கல்யாணத்த நடத்தி வைக்கணும்” என்று கூறி போனை வைத்துவிட்டார்.
அதிர்ந்து போனேன் நான். என்வார்த்தையை நம்பி கல்யாண ஏற்பாட்டை செஞ்சுட்டாங்க. எப்படி பணம் தெரட்டறது? எப்படி கல்யாணத்தை நடத்தறது? மிகுந்த குழப்பம், கலக்கம். தீவிரமாக இதப்பத்தி ஒருநாள் நான் யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பன் சம்பத் “என்னடா விஷயம், ஒரு மாதிரியா இருக்க?” ன்னு கேட்டான். முழு விஷயமும் சொன்னேன். சிறிது நேரம் யோசித்தவன் சொன்னான்.
“கவலைப்படாதடா. தெரிஞ்சவங்க எல்லார்ட்டயும் கையேந்தணும். அவ்வளவு தான். அது பரவா இல்ல. கல்யாணம் நடந்தா சரி. ஒண்ணுமே சரியா வரலன்னா கடைசியா இப்படிக்கூட செய்யலாம். என் அண்ணன் லயன்ஸ் கிளப்ல இருக்கான். அவனுக்கு 200க்கு மேல நண்பர்கள் இருக்காங்க. பலபேர் எனக்கும் பரிச்சயமானவங்க. அவங்க அட்ரஸ அண்ணன்டேந்து வாங்கி அவன் காரிலேயே அவன் நண்பர்கள் ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் போலாம். பணம் கேட்க வேண்டாம், பழைய நியூஸ் பேப்பர தரச்சொல்லுவோம். ஒரு வீட்ல் நான்கைந்து கிலோ என்றால் கூட குறைந்த பட்சம் 400 கிலோ தேறும். கடைல போட்டா அதுலயே சுமார் ரு.2000 வந்துடும். ஒன்னும் கவலப்படாதடா” என்றான். அவ்வளவு தான். ஒரு யானை பலம் வந்துவிட்டது எனக்கு. இவனப்போல நண்பங்க இருந்தாங்கன்னா ஆயிரம் கல்யாணம் கூட நடத்தி விடலாம் என்று தோன்றியது..
அத்தோடு நிற்காமல் சம்பத் என்னை தனது நண்பரின் மனைவி ஏதாவது ஐடியா கொடுப்பார் என்று அவரிடம் கூட்டிப்போனான். அவர்களோ சம்பத்தை மிஞ்சிவிட்டார்கள்.
“இன்னிக்கு காலைல 4 மணி இருக்கும்னு நெனக்கறேன், ஒரு சொப்பனம். குடுமி வெச்ச ஒரு பையன் வீட்டு வாசல்ல நின்னு யாசகம் கேக்கறாப்ல. முழிச்சதும் காலைல கண்ட கனவு பலிக்கும்னு சொல்லுவாங்களே, ஒருவேள அப்படி யாராவது வந்துவிட்டால் என்ன செய்றதுன்னு யோசனையா இருந்தேன். அப்போது, ஆஞ்சனேயருக்கு நேர்ந்துகொண்டு செய்யாமல் விட்ட 17 வடைமாலைகள் ஞாபகம் வந்தன. அதுல ஒரு வடைமாலை மட்டும் ஆஞ்சனேயருக்கு சார்த்திவிட்டு, மீத வடைகளுக்கான பணத்தை ஏதாவது நல்ல காரியத்திற்கு கொடுக்கலாமே! எதுக்காக 17 மால வடையும் தின்ன முடியாம தின்னனும்னு தோணித்து. சொல்லிவெச்சாப்ல நீங்களும் உதவி கேட்டு வந்திருக்கீங்க. அதுனாலயே நம்ம நெனப்பு சரியாத்தான் இருக்கணும்னு தோணறது. ஒருநிமிஷம் இருங்க” ன்னு சொல்லி, கோவிலுக்கு ஃபோன் போட்டு ஒருவடமாலைக்கு எவ்வளவு பணம்னு கேட்டு கணக்குப்பண்ணி துல்லியமா எங்கிட்ட குடுத்துட்டாங்க. எவ்வளவு மன முதிர்ச்சி? எவ்வளவு பேர் இதற்கு தயாராக இருப்பாங்க? மெய் சிலிர்த்துப்போனது. தெய்வமே துணை நிற்பது புரிந்தது.
ஆழ்வார்பேட்டையில் ஒரு நல்லவர் உதவுவார் என்பதறிந்து அவரைப்போய் பார்த்தேன். அவர் சொன்னார், நீ முதலில் காஞ்சி சென்று பெரியவரிடம் பத்திரிக்கை கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் இவ்வளவு தான் கொடுப்பேன் என்று கூறி ரூ.501 கொடுத்தார். 1982 இல் அதுவே பெரிய தொகை தான். காஞ்சி சங்கர மடம் சென்றேன். பத்திரிக்கை கொடுத்து விஷயம் சொன்னதும் வேறொன்றுமே கேட்காமல் திருமாங்கல்யம் தந்து உதவினார்கள். பிரமிப்பாக இருந்தது.
ஆயுள் இன்சுரன்ஸ் ஏஜென்ட் ஒருவர் தானாக முன்வந்து அவர் பணி செய்யும் இடத்தில் சொல்லி, கூறைப்புடவையும், மாப்பிள்ளைக்கு வேட்டியும் வாங்கி கொடுத்தார். என் காரியாலய நண்பர்கள் மற்றும் பலரும் உறவினர்களும் பண உதவி செய்து மொத்தம் சுமார் ரூ.7000 சேர்ந்தது.
கல்யாணத்திற்கு இரண்டே நாள் இருந்தது. பணம், தாலி, கூறைப்புடவை, மாப்பிள்ளைக்கு வேஷ்டி எல்லாம் எடுத்துக்கொண்டு பஸ்ஸில் கிளம்பி நாகர்கோவில் வந்து சத்திரம் அடைந்தேன். சத்திரத்தில் ஆளரவமே இல்லை. உற்றுக் கவனித்தேன். ஒரு மூலையில் யாரோ ஒரு பெண்மணி குத்திட்டு அமர்ந்திருப்பது போல் தெரிந்தது. குரல் கொடுத்தேன். நண்பனின் தாய் தான். கவலையுடன் அமர்ந்திருந்தவர் ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டு விட்டார். ஒருவேளை நான் வராவிட்டால் என்ன செய்வதென்று எண்ணிக் கலக்கத்துடன் அமர்ந்திருந்தாராம்.
கிராமத்துக் கல்யாணம் நன்றாக நடந்தேறியது. அதிகாலை முஹூர்த்தம் முடிந்தது . ஒரு பாரம் குறைந்தது போல் உணர்ந்தேன். ஓய்வாகப் படுத்திருந்தேன். அதற்குள் எனக்கு மனைவியிடமிருந்து ஃபோன் வந்திருப்பதாகச் எழுப்பிவிட்டார்கள். ஆச்சரியமாக இருந்தது, ஏனென்றால் 1985ல் சென்னையில் எங்கள் வீட்டில் கூட போன் கிடையாது. அவளுக்கு மண்டபத்தின் பக்கத்து வீட்டு போன் நம்பர் எப்படி கிடைத்தது என்று வியந்தேன்.
“கல்யாணம் நல்லபடி நடந்ததா?” என்று கேட்டாள்
“ஆம், நன்றாகவே நடந்தது” என்றேன்.
“ஒரு குட் நியூஸ். உங்களுக்கு ஆபீஸராகப் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது” என்றாள். முதலில் ஒன்றும் புரியவில்லை. அப்புறம் தான் ஒரு மாதத்திற்கு முன் ஆபீசில் பதவி உயர்விற்காக நேர்முகத் தேர்விற்குச் சென்றது நினைவிற்கு வந்தது.
“இப்போது தான் உங்கள் ஆபிஸிலிருந்து முரளி போன் பண்ணிச் சொன்னார் உங்களுக்கு பதவி உயர்வு வந்திருக்குன்னு. ராம்கி தங்கை கல்யாணத்திற்கு எவ்வளவு முயற்சி எடுத்து நடத்தி வைத்திருக்கீங்க! நல்ல காரியம் செய்ததற்கு கடவுள் கைமேல் பலன் குடுத்திருக்கிறார். சரியா முஹூர்த்தம் முடிந்த உடன் செய்தி வந்திருக்கிறது பாருங்களேன். அதனால் தான் உங்களுக்கு உடனேயே தெரிவித்துவிட வேண்டும் என்று தோன்றியது” என்றாள் என் மனைவி.
“எப்படி உனக்கு இந்த ஃபோன் நம்பர் கிடைத்தது?” என்று கேட்டேன்.
” நான் டெலிபோன் ஆபரேட்டர் தானே. ராம்கி ஒரு டெக்ஸ்டைல் ஃபேக்டரியில கணக்கராக வேலை பார்க்கிறார் என்பது தெரியும். நாகர்கோவில் ஆபரேடரிடம் இன்று அவரது தங்கையின் திருமணம் என்ற விவரமும் கூறி முயன்று பார்க்கச் சொன்னேன் கிடைத்து விட்டது” என்றாள். எல்லாமே ஏதோ சினிமாவில் நடப்பது போல் இருந்தது.
ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால், “முன்பின் தெரியாத ஒரு இளைஞனை நம்பி, அவன்சொன்னவற்றிற்கு மதிப்புத் தந்து, அவனை அறிந்திராதவர்கள் கூட எந்தவித சந்தேகமும் இல்லாமல் எப்படி உதவினார்கள்?” என்று பிரமிக்கிறேன்.
யோசித்ததில் தோன்றியது, சுயநலமில்லாத, மனிதநேயம் மிஞ்சி நிற்கிற செயல்கள் எதையுமே, மனமுவந்து செய்ய ஒருவர் முனைந்தவுடன், ஆண்டவன் அதைத் தன்செயலாக அங்கீகரித்து விடுவதாலேயே உதவிகள் தாமாக வந்து சேர்கின்றன. இன்னொரு வகையில் சொல்வதானால், நற்செயல்களில் நமக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி நம்மை ஒரு கருவியாக உபயோகப்படுத்திக்கொண்டு, ஆண்டவன் தான் செய்துமுடிக்க வேண்டிய செயல்களைச் செய்வித்துக் கொள்கிறான். நல்லது முனைந்தோரின் எண்ணத்தினை முடித்து வைப்பது மூலம் நல்லவை மீண்டும் தொடர வழி வகையும் செய்கிறான். ஆனால் நாமோ, நடந்ததைப் புரிந்துகொள்ளாமல் “நாமே செய்துவிட்டோம்” என்று மார் தட்டிக்கொள்கிறோம்! வேடிக்கைதான்!!
